அவசர எச்சரிக்கைகள்

rss

அனர்த்த முகாமைத்துவ கொள்கைக்கான அறிமுகம்

இலங்கை பலவகையான இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றில் வெள்ளங்கள், மண்சரிவுகள், சூறாவளிகள், வரட்சிகள், பாறை வீழ்தல், நில அடுக்கு நகருதல், நில நடுக்கங்கள், புயல்கள், கடலோர வெள்ளங்கள், கடலரிப்பு, உப்பாதல், மண்ணரிப்பு, மண் அடைதல், குடிநீர் வளங்களுக்குள் உப்புநீர் புகுதல், காட்டுத்தீ, உயர்காற்று, சுழல்காற்று போன்றவை அடங்கும். அத்துடன் உள்ளூருக்கு உரியதான மின்னல் தாக்கங்கள், சூழல் மாசடைதலுடன் தொடர்பான தொற்றுநோய்கள் போன்றனவும் பரவலாக ஏற்படுபவை. 2004 டிசம்பரில் ஏற்பட்ட இந்துசமுத்திர சுனாமியும் ஒழுங்கில்லாத மற்றும் எப்போதாவது ஏற்படும் ஏதுநிலைகளுக்கு இலங்கை முகம் கொடுப்பதை சுட்டி நிற்கின்றது. கடந்த 400 வருடங்களில் தீவின் பல பகுதிகளில் சேதம் விளைவித்த மற்றும் சேதம் விளைவிக்காத பூமியதிர்ச்சிகளும் பதிவாகியுள்ளன.

இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் மீடிறன் அதிகரித்துச் செல்லும் போக்கில் காணப்படுகிறது. இது பிரதானமாக திட்டமிடப்படாத அபிவிருத்தி, சூழல் மாசடைதல், மனித தலையீடுகள் மற்றும் காலநிலை மாற்றங்களால் ஏற்படுகின்றது. மனித தலையீடுகள், ஏற்கனவே ஏற்படாத அனர்த்தங்கள் ஏற்படுவதற்கும் அனர்த்தங்கள் ஏற்படும் மீடிறன் அதிகரிப்பதற்கும் காரணமாக அமையும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாகும். இதிலிருந்து மக்கள் பெரும்பாலான இயற்கை அனர்த்தங்கள் உருவாக்குவதில் தாக்கம் செலுத்த முடியாவிட்டாலும் தமது நடவடிக்கைகளால் இயற்கை நிகழ்வுகள் பாரிய அனர்த்தங்களாக மாற்றமடையாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் பெரும் பொறுப்பு உண்டு. இவ்வாறான மனித நடவடிக்கைகளாக முறையற்ற நிலம் நிரப்புதல், காடழிப்பு, பாரபட்சமற்ற பவளப்பாறைகள், மணல் மற்றும் இரத்தினக்கல் அகழ்வு போன்றவை அமையும்.

சனத்தொகை அதிகரிப்புடன், இயற்கை அனர்த்தங்களுக்கு முகம் கொடுக்காத காணிகளுக்கு தட்டுப்பாடு காணப்படுவதாலும், அவ்வாறான காணிகளுக்கு அதிகளவு மக்கள் குடிபெயரும் போக்கு காணப்படுவதாலும் அவ்வாறான இடங்கள் அனர்த்தங்களுக்கு முகம் கொடுக்கும் நெருக்கடி நிலை ஏற்பட அதிகமான சாத்தியங்கள் உள்ளன. அவ்வாறான நிலைகளில் மேற்கொள்ளப்படும் திட்டமிடப்படாத அபிவிருத்திகள் முற்றுமுழுதான இடர்களுக்கான ஏதுநிலையை அதிகரிக்கும். இவ்வாறான காரணங்களால், ஏழைகளே இவ்வாறான ஏதுநிலை கொண்ட காணிகளில் தங்குவதால், கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைகளே அனர்த்தத்திற்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. சூழலைப் பாதுகாப்பதன் மூலமே அபிவிருத்தியை சாதகமாக்கவும் நிலைபேறாக வைத்திருக்கவும் முடியும். இது தீங்குகளின் உருவாக்கத்தை தடுக்க உதவும். இது அபிவிருத்தி, சூழல் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் என்பன ஒன்றுடனொன்று நெருக்கமாக இணைக்கப்பட வேண்டுமென்பதை வலியுறுத்துகின்றது.

இயற்கை அனர்த்தங்களுக்கு மேலதிகமாக நமது நாடு மனிதனால் உருவாக்கப்பட்ட பல்வேறு அனர்த்தங்களான தொழிற்றுறை ஆபத்துக்கள், பாரிய தொழிற்றுறை மற்றும் குடியிருப்பு விபத்துகள், வான் மற்றும் கடல் ஆபத்துக்கள், நகரத்தீ, தொற்றுநோய்கள், குண்டுவெடிப்புகள், வான் தாக்குதல்கள், சிவில் அல்லது உள்நாட்டு கலவரங்கள், இரசாயன  விபத்துகள் (நஞ்சு, வாயு, எரிபொருள், ஏனையவை), கதிரியக்க ஆபத்துக்கள், உள்நாட்டு மற்றும் கடல் எண்ணெய்க்கசிவு, தீங்கான திரவியங்கள்  மற்றும் தீவிரவாதத்துடன் தொடர்பான அனர்த்தங்கள் உள்ளடங்கலான பாரிய போக்குவரத்து விபத்துகள் போன்ற அனர்த்தங்களுக்கு முகம் கொடுத்துள்ளது. இன முரண்பாடுகள் மற்றும் இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணு அனர்த்தங்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

அனர்த்தங்கள் என்பது உயிர்களுக்கும் சொத்துகளுக்கும் பாரிய சேதம் ஏற்படும் அசாதாரணமான நிகழ்வாகும். எதிர்வுகூறப்பட்டாலும் மனிதக் கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்ட காரணங்களால் அனர்த்தங்கள் முழுதாக தவிர்க்கப்பட முடியாதவையாகும். எப்பொழுதும் மனித மற்றும் திரவியங்களுக்கு இழப்பு ஏற்படுவது சாத்தியமானது. இந்த நிலையில் 21ஆம் நூற்றாண்டில் அனர்த்தங்களை முகாமைத்துவம் செய்வதற்கு திட்டமிட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட, தேசியரீதியாக ஒரு குடையின் கீழான அணுகுமுறை அவசியமாகும். அனர்த்தங்களை குறைப்பதை நோக்காகக் கொண்டு இது சாத்தியமான தருணங்களில் அனர்த்தங்கள் ஏற்படுவதை தடுத்தல், அவற்றின் தாக்கத்தை குறைத்தல் மற்றும் திறனான எதிர்வினையை உறுதிப்படுத்தக் கூடிய தயார்நிலையை உறுதிப்படுத்தல் போன்றவற்றை மையப்படுத்தியிருக்கும்.

நாட்டின் பல பகுதிகளிலும் இயற்கையாகவும் மனிதனாலும் உருவாக்கப்படும் அனர்த்தங்களுக்கான அனர்த்த இடர்களையும் பங்களிக்கும் காரணிகளையும் மதிப்பிடுவது அனர்த்த இடர் குறைப்பு தலையீடுகள் மற்றும் ஏற்பட்டால் எதிர்வினையாற்றக்கூடிய தயார்நிலையில் இருப்பதற்கு, சாத்தியமான விரைவில் மீளமைப்பதை உறுதிப்படுத்துவதற்கு தேவையானதாகும். இது அனர்த்த முகாமைத்துவ தேசிய கொள்கையொன்றுக்கான தேவையை வலியுறுத்துகின்றது. இக்கொள்கை அனைத்து நிறுவனங்களையும் சமூகத்தையும் அனைத்து மக்கள், சொத்துகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு உச்ச பாதுகாப்பை உறுதிப்படுத்தகூடிய வகையில் அர்ப்பணிப்புடன் செயற்பட வைக்கும்.

கொள்கை சட்டவுரு

2005 மே மாதத்தில் 2005 இல.13 இலங்கை அனர்த்த முகாமைத்துவ சட்டமானது, நாட்டில் அனர்த்த முகாமைத்துவ தொகுதியை நிறுவனமயப்படுத்தக் கூடிய சட்ட ஏற்பாடுகளைக் கொண்டதாக இயற்றப்பட்டது. இச்சட்டம் தேசிய அனர்த்த முகாமைத்துவப் பேரவையை தாபிப்பதற்கு வழிவகுத்தது. இப்பேரவையானது நாட்டில் அனர்த்த இடர் முகாமைத்துவத்துக்கான நெறிப்படுத்தலை வழங்கும் அமைச்சுக்களுக்கிடையேயான உயர்மட்ட அமைப்பாகும். மேலும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தை தாபிப்பதற்கும் வழிவகுத்தது. அனர்த்த முகாமைத்துவ நிலையமானது அனர்த்த இடர் முகாமைத்துவத்துக்கான பிரதான முகவர் நிறுவனமாக தொழிற்படுவதுடன் ஒருங்கிணைப்பு, வசதிப்படுத்தல் மற்றும் ஒன்றுசேர்த்தல் போன்றவற்றில் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றும். 2006 ஜனவரியில் தனியான அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சு தாபிக்கப்பட்டு தேசிய அனர்த்த முகாமைத்துவப் பேரவையும் அனர்த்த முகாமைத்துவ நிலையமும் அதன்கீழ் பட்டியலிடப்பட்டன.

கொள்கையானது, ஏதுநிலை கொண்ட சமுதாயத்தின் அனர்த்தத்திலிருந்து மீளெழுவதற்கான, செயற்பாட்டுக்கான ஹையோகோ சட்டவுருவை அடிப்படையாகக்கொண்டது. இந்த சட்டவுருவுக்கு இலங்கையும் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த சட்டவுரு பின்வரும் ஐந்து முன்னுரிமை பகுதிகளை அடையாளம் கண்டுள்ளது.

  • இடர் குறைப்பானது, நடைமுறைப்படுத்துவதற்கான பலமான நிறுவன அடிப்படையுடனான தேசிய முன்னுரிமை என்பதை உறுதிப்படுத்தல்.
  • அனர்த்த இடர்களை அடையாளம் காணல், மதிப்பீடு செய்தல், மற்றும் கண்காணித்தல் ஊடாக முன்கூட்டிய எச்சரிக்கையை செழுமைப்படுத்தல்
  • அறிவு, புத்தாக்கம், கல்வியை உபயோகித்து அனைத்து மட்டங்களிலும் பாதுகாப்பான கலாச்சாரத்தை கட்டியெழுப்புதல்
  • இடர்க்கான அடிப்படைக் காரணிகளை குறைத்தல்
  • திறனான எதிர்வினைக்காக அனர்த்த தயார்நிலையை பலப்படுத்தல்

கொள்கையின் நோக்கங்கள்

தேசிய அனர்த்த முகாமைத்துவ கொள்கையின் பிரதான நோக்கம் அனைத்துப் பங்காளர்களின் ஒத்துழைப்புடன் பின்வரும் விடயங்களை தாபித்தல், பலப்படுத்தல் மற்றும் பேணுதல் ஆகும்.

  • அனர்த்த இடர் முகாமைத்துவத்தின் திறனளவுகளை செழுமைப்படுத்துவதற்கான நிலைபேறான பொறிமுறைகள், கட்டமைப்புகள், வேலைத்திட்டங்களை அறிமுகப்படுத்தல்
  • அனர்த்த இடர் முகாமைத்துவத்திற்கான தேசிய, பிராந்திய மற்றும் உள்ளுர்மட்ட ஒருங்கிணைப்பு பொறிமுறைகளை தாபிப்பதை உறுதிப்படுத்தல்
  • விசேட நிதியம் ஒன்றினூடாக அனர்த்த இடர் முகாமைத்துவ நடவடிக்கைகளுக்கான வளங்கள் கிடைப்பதை உத்தரவாதப்படுத்தல்
  • பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதையும் மற்றும் சூழலுக்கான பாதிப்பையும் குறைத்தல்
  • நிலைபேறான அபிவிருத்தியை அடைவதற்காக வள ஒதுக்கீடு உள்ளடங்கலாக துறை அபிவிருத்தி வேலைத்திட்டங்களுள் அனர்த்த இடர் குறைப்பை ஒருங்கிணைப்பதும் பிரதான நீரோட்டத்தில் இணைப்பதும்
  • உயிர்களையும் சொத்துகளையும் பாதுகாப்பதற்காக இலங்கையில் அனர்த்தங்களுக்கு எதிர்வினை ஆற்றவும் அனர்த்தங்களின் அச்சுறுத்தல்களுக்குமான பொருத்தமான வழிமுறைகளையும் வழிகாட்டல்களையும் பயன்படுத்துவதை உறுதிப்படுத்தல்
  • இடைக்கால மற்றும் நீண்டகால மீள்நிர்மாணம் மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளில் முன்னைய காலங்களை விட உயர் நியமங்களை பின்பற்றுதல்
  • அனர்த்தங்களுக்கு ஆளான பிரதேசங்களில் கட்டட நிர்மாணத்திற்கான திட்டமிடல் வழிகாட்டிகளையும் கட்டட ஒழுக்கக் கோவைகளையும் அறிமுகப்படுத்துவதை உறுதிப்படுத்தல், ஏதுநிலை கொண்ட சமுதாயத்தின் மீள் எழுகையை முன்னேற்ற சமூக அடிப்படையிலான அனர்த்த முகாமைத்துவத்தையும் நுண் காப்புறுதியையும் மேம்படுத்தல்

நிறுவன ஏற்பாடுகள்

அனர்த்தங்களை கையாளும் பொறுப்பு தேசிய அரசாங்கம், மாகாண சபைகள், உள்ளூராட்சி அதிகாரசபைகள் மற்றும் மாவட்ட மட்ட நிர்வாகத் தொகுதியிடம் தங்கியுள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையமானது தேசிய, பிராந்திய மற்றும் கிராமிய மட்டங்களிலுள்ள ஒருங்கிணைப்பு குழுக்களினூடாக பொருத்தமான அமைச்சுகள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள், மற்றும் ஏனைய சமூக, சமுதாய நிறுவனங்களுடன் ஒருங்கிணைத்தல், வசதிப்படுத்தல் மற்றும் ஒன்றுசேர்த்தலில் ஒரு பாத்திரத்தை வகிக்கின்றது.

அனர்த்த இடர் முகாமைத்துவம் தொடர்பாக அடையாளம் காணப்பட்ட விடயப் பரப்புகளில் விசேட தொழினுட்ப மற்றும் ஆலோசனை செயற்குழு நியமிக்கப்படும். இக்குழுவில் பல்வேறு பங்காளர் நிறுவனங்கள், கல்வியாளர்கள் மற்றும் தனியார் மற்றும் அரச துறையைச் சேர்ந்த பொருத்தமான நிபுணர்களைப் பிரதிநித்துவம் செய்பவர்களை உள்ளடக்கியிருக்கும்.

வழிகாட்டல் கொள்கைகள்

தேசிய அனர்த்த முகாமைத்துவ கொள்கையானது பின்வரும் தத்துவங்களால் வழிகாட்டப்படும்

  • அனர்த்தத்திற்கு முந்தைய கட்டத்தில் முன்கூட்டிய எச்சரிக்கை, எதிர்வினைக்கான தயார்நிலை, தணித்தல், தடுத்தல், விழிப்புணர்வு, மற்றும் பயிற்சி என்பனவற்றிற்கு உயர் முன்னுரிமை வழங்கப்படும்.
  • முன்கூட்டிய எச்சரிக்கையின் உருவாக்கமும் வழங்கலும் அடையாளம் காணப்பட்ட தொழினுட்ப முகவர்களால் மேற்கொள்ளப்பதுவதுடன் பரப்புதல் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் தங்கியிருக்கும்.
  • அனர்த்தத்தின் போது உயிர்களையும் சூழலையும் பாதுகாப்பதற்கு உயர் முன்னுரிமை வழங்கப்படுவதோடு மக்களின் அவசரத் தேவைகளை நிறைவேற்றல், உடனடி உயிராபத்துக்கான சாத்தியமான தீங்குகளை தணித்தல் போன்றவற்றையும் உள்ளடக்கியிருக்கும்.
  • அனர்த்தத்திற்கு பிந்திய கட்டத்தில் மக்களுக்கான அடிப்படைத்தேவைகளை வழங்குதல், அத்தியாவசிய சேவைகளின் உடனடி மீளமைப்பு, இடைக்கால மற்றும் நீண்டகால புனர்வாழ்வு மற்றும் மீள்நிர்மாணத்தில் முன்னைய காலங்களை விட உயர் நியமங்களை அடைதல் என்பனவற்றுக்கு உயர் முன்னுரிமை வழங்கப்படும்.
  • அனர்த்தத்தின் போது தீவிரத்தன்மை அடிப்படையிலும் அனர்த்தத்திற்கு முந்திய கட்டத்தில் ஏதுநிலை அடிப்படையிலும் வளங்களைப் பகிர்வதில் சமத்துவத்தைப் பேணுதல்
  • ஏதுநிலை கொண்ட மற்றும் பாதிக்கப்பட்ட அனைத்து சமூகங்களையும் சமமாக நடாத்துதல்
  • தனியார்துறையினரை அனர்த்த இடர் முகாமைத்துவத்தை அவர்களின் சமூகப் பொறுப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக பங்களிப்பு செய்வதை ஊக்குவித்தல்
  • அனர்த்த முகாமைத்துவத் துறையில் ஊக்கத்துடன் செயற்படும் அனைத்து பங்காளர்களுக்கும் ஒழுக்கக் கோவையோன்றை விருத்தி செய்தலும் ஏற்றுக் கொள்ளலும்
  • தகவல் அறியும் உரிமை - ஏதுநிலை மதிப்பீடு, உரிய எதிர்வினை மற்றும் அனர்த்தத்திற்கு பிந்திய எதிர்வினை குறித்த தகவல்கள்
  • பங்குபற்றும் உரிமை - ஏதுநிலைப் பிரதேசங்களில் அனர்த்தம் தொடர்பான தீர்மானம் எடுப்பதிலும் அபிவிருத்தி  தொடர்பான தீர்மானம் எடுப்பதிலும் பங்குபற்றல்
  • பொறுப்புக் கூறலை நாடும் உரிமை - அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய மன்றத்தால் உள்ளூர் மட்டத்தில் நியமிக்கப்பட்ட ஒரு குழு அல்லது பிரதேச அல்லது மாவட்ட செயலாளரை அணுகுவதன் மூலம் விசேடமாக அனர்த்த நிவாரண நடவடிக்கைகளில் பொறுப்புக் கூறலையும் திருத்தங்களையும் நாடுதல்

மூலோபாயங்கள்

கொள்கையின் நோக்கங்களை அடைவதற்கு பின்வரும் மூலோபாயங்கள் பின்பற்றப்படும்.

அனர்த்த தணிப்பு அல்லது குறைப்பு, அனர்த்த கவனங்களை ஒருங்கிணைத்தல் அபிவிருத்தி திட்டமிடல் செயன்முறையில் தொழினுட்ப முகவர்களின் ஒத்துழைப்பினூடாக, உள்ளடங்கலான பொருத்தமான தணித்தல் முறைகளை கைக்கொள்வதன் மூலமாக அனர்த்த இடர்கள் குறைக்கப்படும். தணித்தல் செயன்முறையில் மனித உயிர்கள், பொதுச் சொத்துகள் மற்றும் உட்கட்டமைப்புகளை அனர்த்தங்களின் தாக்கங்களிலிருந்து பாதுகாத்தலுக்கு உயர் முன்னுரிமை வழங்கப்படும்.

நாட்டிலுள்ள அனர்த்த நிலை தொடர்பான அனைத்து தகவல்களும் ஒரேயிடத்தில் இருப்பதை உறுதிப்படுத்துவதற்காகவும் அத்துடன் சர்வதேச உதவி முகவர் நிறுவனங்களால் வழங்கப்படும் தொழினுட்ப உதவிகளை ஒருங்கிணைக்கும்போது தொழினுட்ப இடமாற்றம் ஒரு மத்திய நிலையத்தில் அமைவதை உறுதிப்படுத்துவதற்காகவும் பல்-அனர்த்த வரைபடம், ஏதுநிலை மற்றும் இடர் மதிப்பீடு என்பன மேற்கொள்ளப்படும்.

அனைத்து அனர்த்தங்களையும் வினைத்திறனாக முகாமைத்துவம் செய்வதை உறுதிப்படுத்துவதற்காக அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு குழுக்களினூடாக மாகாண, மாவட்ட, பிரதேச, உள்ளூராட்சி அதிகாரசபைகள், கிராம அதிகாரி மட்டங்களில் அனர்த்த எதிர்வினைக்கான தயார்நிலைத் திட்டம் விருத்தி செய்யப்படும். தனியார் துறையை பிரதான நீரோட்டத்தில் இணைக்கவும் அனர்த்த முகாமைத்துவத்தை அவர்களின் சமூகப் பொறுப்பு கடமையாக வருடாந்த நிகழ்ச்சி நிரலில் இணைக்கவும் ஊக்குவிக்கப்படும்.

சமூக அடிப்படையிலான  அனர்த்த முகாமைத்துவத்தை ஊக்குவிக்கப்பதனூடாக உயிர்கள் மற்றும் சூழலை அனர்த்தங்களிலிருந்து பாதுகாத்தல் மற்றும் பராமரித்தல் மற்றும் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அபிவிருத்தி செய்தல்.

அதிக ஆபத்து கொண்ட பிரதேசங்களில் வசிக்கும் ஏதுநிலை கொண்ட மக்களுக்கு சாத்தியமான விரைவில் தேசிய மற்றும் சர்வதேச முகவர் நிறுவனங்களால் வழங்கப்படும் பல்வேறு அனர்த்தங்கள் தொடர்பான எதிர்வுகூறல்களையும் எச்சரிக்கைகளையும் பரப்புவதற்காக நாடு முழுவதும் நம்பகரமான மற்றும் வினைத்திறனான முன்னெச்சரிக்கை பரப்புகை தொகுதிகள் தாபிக்கப்பட்டு பராமரிக்கப்படும்.

தற்போது குறிப்பிடப்பட்ட அனர்த்தங்கள் தொடர்பாக ஒருங்கிணைப்பு, கண்காணித்தல், அல்லது எச்சரிக்கை வழங்கலில் ஈடுபடும் ஏதாவது அங்கீகரிக்கப்பட்ட, ஆனால் சட்டரீதியான ஆணையில்லாத நிறுவனங்கள், தேவையான சட்டரீதியான ஆணைகளுடன் பலப்படுத்தப்படும். போதுமான நிறுவனத் திறனளவு இல்லாமை மற்றும் தகவல் தொடர்பாடல் தொகுதிகளிலுள்ள குறைபாடுகள் மேம்படுத்தப்படும்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வியாபித்திருக்கின்ற இயற்கை மற்றும் மனிதனால் ஏற்படுத்தப்படும் ஆபத்துகள் தொடர்பான எதிர்வினை நடவடிக்கைகளை உள்ளடக்குவதற்காக தேசிய மற்றும் உபதேசிய மட்ட அவசர நடவடிக்கை நிலையங்களும் மற்றும் ஒரு தேசிய மட்ட அழைப்பு நிலையமும் தாபிக்கப்பட்டு 24/7 அடிப்படையில் செயற்படுத்தப்படும்.

பாதிக்கப்பட்ட சமுதாயத்தின் சிதைக்கப்பட்ட வாழ்வாதாரத்தை விரைவாக மீட்டுக் கொள்வது தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்களின் சமூகநீதி, நடுநிலைமை, பக்கச்சார்பின்மை, பெறுமதிகள், மற்றும் கலாச்சாரத்தைப் பின்பற்றி பொருத்தமான அமைச்சுகள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் குறுகிய காலத்தில் அவர்களுக்கு சாத்தியமான உதவிகள் வழங்கப்படும்.

எந்த அனர்த்தத்தாலும் பாதிக்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கியிருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்றிடம் தேவைப்பட்டால் சாத்தியமான விரைவில் பாதுகாப்பான (தற்காலிக அல்லது நிரந்தர) வீடுகள் வழங்கப்படும்.

நிவாரணம் மற்றும் தங்குமிட முகாமைத்துவம் தொடர்பான நடவடிக்கைகள் மாகாண, உள்ளூராட்சி அதிகாரசபைகள், மாவட்ட, பிரதேச, மற்றும் கிராம அதிகாரிகள் மட்டங்களில் எதிர்வினை மற்றும் தயார்நிலைத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டபடி அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், வியாபர சமூகங்கள், சமூக அடிப்படையிலான நிறுவனங்கள் ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன் அவர்களின் உதவிகளையும் இருக்கும் வளங்களையும் பெறுவதற்காக நடைமுறைப்படுத்தப்படும். இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது பாதிக்கப்பட்ட மக்களின் சமூகநீதி, முறையான நிவாரணப் பங்கீடு, நடுநிலைமை, பக்கச்சார்பின்மை, தனித்தன்மை, பெறுமதிகள், மற்றும் கலாச்சாரத்தை மதித்தல் என்பன கட்டாயமாக கடைப்பிடிக்கப்படும்.

தேவையேற்படின், பாதிக்கப்பட்டவர்களுக்கு காணிகள் அடையாளம் காணப்பட்டு நிரந்தரமாக வழங்கப்படும்வரை பாதிக்கப்பட்ட மக்களை தற்காலிகமாக தங்கவைப்பதற்கு பயன்படுத்தக்கூடிய நிரந்தர உட்கட்டமைப்பு வசதிகளை நாட்டின் முக்கியமான இடங்களில் அமைத்தல்

அனர்த்த முகாமைத்துவ நிலையம், பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு தேவையான மேலதிக வளத் தேவைகளை பாதிக்கப்படாத பிரதேசங்களிலிருந்து ஒழுங்கு செய்வதற்காக பொருத்தமான பல்வேறு நிர்வாக மட்டங்களுடன் இணைந்து செயற்படும்.

அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு நிவாரண நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தும். அவ்வாறான நிவாரண  நடவடிக்கைகளின் ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பும் முகாமைத்துவமும் இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 29.01.2007 அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்ட படி அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சினால் மேற்கொள்ளப்படும்.

மக்களின் மீள்குடியேற்றம் என்பது ஏதுநிலையின் அல்லது ஏற்பட்ட ஒரு அனர்த்தத்தின் விளைவாக அமையலாம். தேசிய தன்னிச்சையற்ற குடியேற்றக் கொள்கையில் அபிவிருத்தியுடன் தொடர்பான மீள்குடியேற்றங்கள் தொடர்பாக கூறப்பட்ட முக்கியமான மற்றும் உறுதியான நடைமுறைகள் இங்கே பொருந்தும்.

  1. ஏதுநிலைப் பிரதேசங்களில் வசிக்கும் மக்களின் மீள்குடியேற்றத்துக்கான காணிகளை அடையாளம் காணல், காணிகளைப் பகிர்ந்தளித்தல் மற்றும் மேலதிக அனர்த்தங்கள் ஏற்படுவதை குறைப்பதற்கான தணித்தல் நடவடிக்கைகள் போன்றவற்றிற்கு வழிகாட்டிகளை விருத்தி செய்தல்.
  2. மீள்குடியேற்ற செயன்முறையின் அனைத்து கட்டங்களிலும் பாதிக்கப்பட்ட சமூகத்தின் முழுதான ஈடுபாட்டுக்கான பொறிமுறைகளை விருத்தி செய்தல்.

தேசிய அனர்த்த முகாமைத்துவப் பேரவை, அனர்த்தத்தின்போது அல்லது அனர்த்தத்திற்கு பிந்திய நிலையில் தீர்மானம் எடுக்கும் பொறிமுறையை வகுத்துக் கொள்ளவும் காலநிலை மாற்றம், கடல் மட்டம் உயர்வதால் சாத்தியமான கடற்கரைக் குறைப்பு போன்ற அவ்வாறான அனர்த்தங்களுக்கு ஏதுநிலையான சமூகங்களுடனும் பல்வேறு அனர்த்தங்களுடனும் இணைந்த இடர்களையும் ஏதுநிலைகளையும் மதிப்பீடு செய்வதற்கான நடவடிக்கையை எடுப்பதற்காகவும் மூலோபாய நடைமுறைகளை அடையாளம் காண்பதற்காகவும் மாவட்ட அல்லது பிரதேச செயலாளரின் தலைமையில் செயற்குழுவொன்றை நியமிக்கும்.

பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்காக, பாதிக்கப்பட்ட பொதுப்பயன்பாடுகளுக்கு புத்துயிர் கொடுக்கும் உடனடி நடவடிக்கைகளை தேசிய, மாகாண, உள்ளூராட்சி, மற்றும் மாவட்ட/பிரதேச அலகுகள் மேற்கொள்ளும். உள்ளூராட்சி அதிகாரசபைகள் தமது வரம்புக்கு உட்பட்ட சேவைகளில் உடனடி நடவடிக்கை எடுக்கும். சேவைகள் பாரதூரமாக பாதிக்கப்படிருக்கையில், அவ்வாறான சேவைகளை உடனடியாக வழங்கக் கூடிய தற்காலிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அனர்த்த முகாமைத்துவ நிலையமானது, பொருத்தமான அமைச்சுகள், முகவர்கள் மற்றும் வெவ்வேறு மட்டங்களிலுள்ள நிர்வாகங்களுடன் இணைந்து உரியவகையான வித்தியாசமான நடவடிக்கைகளை மேற்கொள்வதனூடாக பயிற்சி  பொதுமக்கள் விழிப்புணர்வு மற்றும் கல்வி வேலைத்திட்டங்களை மேற்கொள்கின்றது.

சமூக அடிப்படையிலான அனர்த்த இடர் முகாமைத்துவம் ஊடாக தங்களை அனர்த்தங்களிலிருந்து பாதுகாக்கவும் அனர்த்தங்களுக்கு நெகிழ்திறன் கொண்டவர்களாக ஆக்கவும் ஏதுநிலை சமுதாயத்தின் திறனளவு மேம்படுத்தப்படும்.

அனர்த்த முகாமைத்துவத்தை பாடசாலைப் பாடவிதானத்தில் இணைக்கவும் ஆசிரியர் பயிற்சி உள்ளடங்கலாக கல்வித்துறையின் நிகழ்ச்சிகளுக்கேற்ப உரியவகையான பாடசாலை விழிப்புணர்வுக்காகவும் பொருத்தமான முகவர்களுடன் இணைந்து செயற்படல். அனர்த்த முகாமைத்துவத்தை மூன்றாம் நிலைக்கல்வி பாடவிதானத்தில் இணைக்கவும் இணைந்து செயற்படும்.

இது பல்கலைக்கழகம் மற்றும் ஏனைய மூன்றாம் நிலைக்கல்வி தாபனங்களில் பொதுவான அனர்த்த முகாமைத்துவ விழிப்புணர்வு மற்றும் பாடங்களின் விடயப் பரப்புக்கான குறிப்பிட்ட உள்ளடக்கங்களை பொருத்தியதாக அமையும்.

அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சு மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் என்பன ஊடகங்களின் பாத்திரத்தை அடையாளம் கண்டுகொள்ளும். ஊடகங்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் சரியான தகவல்களை பொதுமக்களுக்கு சரியான நேரத்திற்கு வழங்குவதற்கான அவர்களின் பொறுப்புகளை வலியுறுத்தும்.

அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான ஒருங்கிணைப்பு பொறிமுறை

நாட்டில் இடர் முகாமைத்துவத்திற்கான பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டபொறிமுறையாக இந்த தேசிய அனர்த்த முகாமைத்துவ கொள்கை அமையும். இது பின்வரும் விடயங்களை வழங்கும்.

  • ஒவ்வொரு தனிப்பட்ட பங்காளரினதும் கடமைகள், பொறுப்புகளை தெளிவாக விளங்கிக்கொள்வதனூடாக அனர்த்தங்களை மேலும் சிறப்பாக முகாமைத்துவம் செய்வதற்காக அனைத்து பங்காளர்களுடனும் தேசிய மட்டத்தில் ஒருங்கிணைப்பு.
  • அமைச்சுகளிடையே, துறைகளுக்கிடையே மற்றும் முகவர்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பு பொறிமுறை ஊடாக அனைத்து அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளிலும் பற்றாக்குறையான வளங்களின் உச்சப் பயன்பாட்டை உறுதிப்படுத்த ஒன்றுடனொன்று மேலாக மீப்படிவு செய்வதை தவிர்த்தல்
  • ஒரு தரவுத்தளத்தை விருத்தி செய்தலும், புவியியல் அமைவிடங்கள், விசேட தகைமைகள், மற்றும் கொண்டுள்ள வளங்களை கருத்தில் கொண்டு தேசிய ரீதியாக அடையாளம் காணப்பட்ட அனர்த்த இடர் முகாமைத்துவ வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அரச சார்பற்ற நிறுவனங்கள், சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சமூக அடிப்படை நிறுவனங்களை ஈடுபட வைத்தலும்.

கண்காணிப்பும் மீள்பார்வையும்

கொள்கையின் கண்காணிப்பும் மீள்பார்வைக்குமான பொறுப்பு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஆலோசனையுடன் அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சிடம் உள்ளது. ஒரு பாரிய அனர்த்தத்தின் பின்னர் அடையாளம் காணப்பட்ட தேவைகள் மற்றும் திறனான நடைமுறைப்படுத்தலுக்கான தேவைகளை உள்ளடக்குவதற்காக கொள்கையானது காலத்துக்குக் காலம் மீள்பார்வை செய்யப்படும்.

அனர்த்த முகாமைத்துவத்திற்கான நிதிகள்

தேசிய அல்லது சர்வதேசரீதியாக அனைத்து சட்டபூர்வமான வளங்கள் மூலம் பெறப்படும் அனைத்து நிதிகளையும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளிப்படையான வகையில் பயன்படுத்தும்.

எதிர்வினை நடவடிக்கைகளுக்காக மாகாண சபை, உள்ளூராட்சி, மாவட்ட, பிரதேச செயலகங்கள் உள்ளடங்கலான பொருத்தமான பங்காளர் நிறுவனங்களின் வருடாந்த பாதீட்டில் அனர்த்த எதிர்வினை நிதியை தாபித்தல்.

அவசர தொடர்புகள்

117
பொது.: +94 112 136 136
அவசர நடவடிக்கை நிலையம்:+94 112 136 222 /
+94 112 670 002
தொலைநகல்: +94 112 878 052